மதுரை: 17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற உள்ள மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவுக்கான ஏற்பாடுகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதாக சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். குடமுழுக்கு ஏற்பாடுகளில் அரசியல் தலையீடு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
செப்டம்பர் 17-ம் தேதி காலை நடைபெற உள்ள குடமுழுக்கு விழாவையொட்டி அமைச்சர்கள் நிர்மல் குமார், ரமேஷ் உள்ளிட்டோர் மதுரையில் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், காவல் மற்றும் சுகாதாரத் துறையினர் இரு ஷிப்டுகளில் பணியாற்றி வருவதாகவும், மின்தடை ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கோயிலின் மேல் தளத்தில் பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக பாதுகாப்பு மற்றும் கட்டிட உறுதித்தன்மை ஆய்வு நடைபெற்று வருவதாகவும், அதன் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
பொதுமக்களுக்கு குலுக்கல் முறையில் 2,000 பாஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு நடைமுறைகளுக்கு உட்பட்டு அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
‘பாஸ்’ விவகாரத்தில் தாங்கள் தலையிடவில்லை என்றும், விழா ஏற்பாடுகளில் அரசியல் தலையீடு எதுவும் இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
இதனிடையே, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் பேசுகையில், குடமுழுக்கு நிகழ்வில் தமிழ் ஓதுவார்களுக்கு உரிய வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், கலசத்தில் நீர் ஊற்றவும் கருவறைக்குச் செல்லவும் அவர்களுக்கு அனுமதி இருப்பதாகவும் தெரிவித்தார்.
