லித்தியம் அயன் பேட்டரிகளில் இருந்து கிடைக்கும் மறுசுழற்சி மூலப்பொருளான ‘பிளாக் மாஸ்’ ஏற்றுமதிக்கு மத்திய அரசு உடனடியாகத் தடை விதித்துள்ளது. வர்த்தக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (DGFT) நவம்பர் 10-ம் தேதி வெளியிட்ட அறிவிப்பின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை குறிப்பிட்ட வகை பேட்டரி கழிவுகள் ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவற்றின் ஏற்றுமதி வகைப்பாடு ‘Free’ என்பதிலிருந்து ‘Prohibited’ என மாற்றப்பட்டுள்ளது. இந்தத் தடை மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பயன்படுத்தப்பட்ட லித்தியம் அயன் பேட்டரிகளை உடைத்து, அதிலிருந்து பெறப்படும் கருமையான தூள் போன்ற பொருளே பிளாக் மாஸ் எனப்படுகிறது. இதில் லித்தியம், கோபால்ட், நிக்கல், மாங்கனீஸ் உள்ளிட்ட முக்கியத் தாதுக்கள் உள்ளன. இவற்றை மீண்டும் பிரித்தெடுத்து புதிய பேட்டரிகள் தயாரிப்பில் பயன்படுத்த முடியும்.
இந்த மூலப்பொருட்கள் இந்தியாவிலேயே மறுசுழற்சி செய்யப்பட்டு மதிப்புமிக்க தாதுக்கள் மீட்கப்பட வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகக் கூறப்படுகிறது. மின்சார வாகனங்கள் மற்றும் பேட்டரி உற்பத்தித் துறைக்கான உள்நாட்டு விநியோகச் சங்கிலியை வலுப்படுத்தவும் இந்த நடவடிக்கை உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
