அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் அபுதாபியில் நடைபெற்ற ரஷ்யா – உக்ரைன் பேச்சுவார்த்தையின் முடிவில், இரு நாடுகளும் அதிக எண்ணிக்கையிலான போர் கைதிகளைப் பரிமாறிக்கொள்ள கொள்கை அளவில் ஒப்புக்கொண்டுள்ளன. நவம்பர் 11-ம் தேதி இரண்டு நாள் பேச்சுவார்த்தை நிறைவடைந்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சிறப்புத் தூதர்களான ஜாரெட் குஷ்னர், ஸ்டீவ் விட்காஃப் ஆகியோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். ரஷ்யத் தரப்பில் விளாடிமிர் மெடின்ஸ்கியும், உக்ரைன் தரப்பில் ருஸ்டெம் உமெரோவும் கலந்து கொண்டனர்.
கைதிகள் பரிமாற்றம் தொடர்பாக அடிப்படை உடன்பாடு ஏற்பட்டிருந்தாலும், எத்தனை பேர் விடுவிக்கப்படுவார்கள், எப்போது பரிமாற்றம் நடைபெறும் என்பது இறுதி செய்யப்படவில்லை. அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் இந்த நடவடிக்கை நடைபெற வாய்ப்புள்ளதாக அமெரிக்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர் முடிவுக்கு வருவது தொடர்பாக முக்கிய உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை. ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைன் பகுதிகள், போருக்குப் பிந்தைய பாதுகாப்பு உத்தரவாதங்கள், ஐரோப்பிய நாடுகளின் பங்களிப்பு போன்ற விவகாரங்களில் இரு தரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு நீடிக்கிறது.
