சிரியாவில் பஷார் அல்-அசாத் ஆட்சி கவிழ்ந்த பின்னர் உருவாகியுள்ள புதிய அரசியல் சூழலைப் பயன்படுத்தி, அந்நாட்டுடனான உறவை விரிவுபடுத்த ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளது. இதற்கான பரிந்துரைகள் அடங்கிய ஆவணம் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத் துறையால் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சிரியாவின் பொருளாதார மறுசீரமைப்பு, பாதுகாப்புத் துறை சீர்திருத்தம், அகதிகள் மற்றும் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களின் மறுவாழ்வு ஆகியவற்றில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து ஆவணத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஜோர்டானுடன் இணைந்து சிரியக் காவல்துறையினருக்குப் பயிற்சி அளிப்பதும் பரிசீலனையில் உள்ளது.
2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டு முழுமை பெறாத வர்த்தக ஒப்பந்தத்தை மீண்டும் செயல்படுத்துவதற்கான வாய்ப்பையும் ஐரோப்பிய ஒன்றியம் ஆராய்கிறது. இதன் மூலம் சுதந்திர வர்த்தகம், முதலீடு, போக்குவரத்து, எரிசக்தி மற்றும் டிஜிட்டல் இணைப்புத் திட்டங்களில் புதிய வாய்ப்புகள் உருவாகலாம்.
2026–27 காலகட்டத்தில் சிரியாவுக்கு 620 மில்லியன் யூரோ நிதியுதவி வழங்க ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கெனவே உறுதியளித்துள்ளது. இந்த முன்மொழிவுகள் தொடர்பாக நவம்பர் 16-ம் தேதி நடைபெற உள்ள ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
