இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி குறித்த தனது கணிப்பை சர்வதேச கடன் மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் உயர்த்தியுள்ளது. 2026–27 நிதியாண்டுக்கான வளர்ச்சி மதிப்பீட்டை 6.5 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் நுகர்வு அதிகரிப்பு, முதலீட்டு நடவடிக்கைகளின் வளர்ச்சி, தொழில்துறை உற்பத்தியில் முன்னேற்றம் ஆகியவை பொருளாதாரத்திற்கு ஆதரவாக இருப்பதாக மூடிஸ் தெரிவித்துள்ளது. குறிப்பாக ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் ஆண்டுக்கு 7.8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
ஈரான் போர் சூழலால் சர்வதேச எரிசக்தி விலைகளில் ஏற்பட்ட அதிர்வுகளை இந்தியா எதிர்பார்த்ததைவிடச் சிறப்பாகச் சமாளித்துள்ளதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதியில் பல்வேறு நாடுகளைச் சார்ந்திருக்கும் அணுகுமுறையும், விலையேற்றத்தின் தாக்கத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளும் இதற்கு உதவியுள்ளன.
இருப்பினும் உணவுப் பொருட்களின் விலை உயர்வு, பருவமழைப் பற்றாக்குறை, பணவீக்கம் மற்றும் வட்டி விகித உயர்வு ஆகியவை எதிர்கால வளர்ச்சிக்கு சவாலாக இருக்கலாம் என்றும் மூடிஸ் எச்சரித்துள்ளது. எனவே வளர்ச்சி கணிப்பு உயர்ந்தாலும் பொருளாதாரத்தின் மீதான அழுத்தங்களைக் கண்காணிக்க வேண்டிய நிலை தொடர்கிறது.
