புதுடெல்லி: மத்திய அரசின் நலத்திட்டங்கள் மற்றும் செயல்திட்டங்களின் பலன்கள் தகுதியான ஒவ்வொருவரையும் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அமைச்சர்களிடம் வலியுறுத்தியுள்ளார். சேவா தீர்த்தில் நடைபெற்ற ‘சிந்தன் ஷிவிர்’ ஆலோசனையில் 8 குழுக்களாக பிரிக்கப்பட்ட அமைச்சர்களுடன் அவர் நேரடியாக கலந்துரையாடினார்.
இரண்டு நாள் ஆலோசனை கூட்டத்தில் அரசின் தற்போதைய பணிகள், எதிர்கால செயல்திட்டங்கள், திட்ட செயல்படுத்தல் மற்றும் நிர்வாக ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அமைச்சர்கள் விவாதித்தனர்.
ஒவ்வொரு குழுவிலும் தலா 8 அமைச்சர்கள் இடம்பெற்றிருந்தனர். பிரதமர் மோடி ஒவ்வொரு குழுவிடமும் தனித்தனியாக சென்று ஆலோசனைகளில் பங்கேற்றார். முதல் நாள் கலந்துரையாடல் சுமார் நான்கரை முதல் 5 மணி நேரம் வரை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெண்கள், இளைஞர்களுக்கு முக்கியத்துவம்
அரசின் திட்டங்கள் தகுதியான பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்தல், நிர்வாக செயல்திறனை அதிகரித்தல், தகவல் தொடர்பை மேம்படுத்துதல், மக்கள் நம்பிக்கையை அடிப்படையாக கொண்ட நிர்வாகத்தை வலுப்படுத்துதல் உள்ளிட்ட அம்சங்கள் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், பெண்கள் மற்றும் இளைஞர்களை மையப்படுத்திய வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆலோசனை கூட்டம் அரசின் எதிர்கால செயல்திட்டங்களை வகுப்பது, தற்போதைய பணிகளை மதிப்பீடு செய்வது மற்றும் அமைச்சகங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை மேம்படுத்துவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இரண்டாவது நாள் ஆலோசனைகள் செப்டம்பர் 24-ம் தேதி தொடர்கின்றன. மேலும் அடுத்த கட்டமாக செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் இதுபோன்ற ஆலோசனைகள் நடைபெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
