சென்னை: குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தலை தடுப்பது, பாதிப்பை முன்கூட்டியே கண்டறிவது மற்றும் புகார் அளிக்கும் நடைமுறைகள் குறித்து ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை விரிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. இதற்காக வெளியிடப்பட்டுள்ள விழிப்புணர்வு கையேட்டில், குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை தடுக்கும் சட்டம், புகார்களை கையாளும் முறை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவுரைகள்
18 வயதுக்குட்பட்ட எந்தவொரு குழந்தையும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் வாய்ப்பு இருப்பதால், மாணவர்களின் நடவடிக்கைகளில் மாற்றம், அச்சம் அல்லது அசாதாரண அறிகுறிகள் தென்பட்டால் ஆசிரியர்கள் கவனத்துடன் அணுக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார் கிடைத்தால், பள்ளி நிர்வாகம் தன்னிச்சையாக குற்றச்சாட்டை விசாரிக்கக்கூடாது என்றும், சட்டப்படி உரிய அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வழிகாட்டுதலில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளி பாதுகாப்பு மற்றும் ஆலோசனைக் குழுவிடம் புகார் அளிக்கும்போது, அந்தக் குழுவில் குறைந்தபட்சம் 3 உறுப்பினர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலீஸ் விசாரணையில் விதிமுறைகள்
மாணவர் தொடர்பான பாலியல் குற்றச்சாட்டை போலீசார் மட்டுமே சட்டப்படி விசாரிக்க வேண்டும். பள்ளி நிர்வாகம் தனியாக விசாரணை நடத்துவது தவிர்க்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், போலீசார் பள்ளி வளாகத்துக்கு வரும்போது மாணவர்களின் மனநிலையையும் பள்ளிச் சூழலையும் கருத்தில் கொண்டு உரிய நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். மாணவரிடம் விசாரணை நடத்தும் முன் பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு உரிய தகவல் தெரிவிப்பது தொடர்பான விதிமுறைகளையும் பள்ளிகள் கடைபிடிக்க வேண்டும் என கையேட்டில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குழந்தையின் பாதுகாப்பு, தனியுரிமை மற்றும் மனநலனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும் என்பதே இந்த வழிகாட்டுதலின் முக்கிய நோக்கமாக உள்ளது.
குழந்தைகள் தங்களுக்கு நேரும் பாதிப்புகளை அச்சமின்றி தெரிவிக்கும் வகையில் பாதுகாப்பான சூழலை பள்ளிகளில் உருவாக்குவதற்கும் ஆசிரியர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும் என கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது.
