பெங்களூரு: சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் மற்றும் நடிகை பவித்ரா கவுடா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தற்போது பெங்களூரு 59-வது சிட்டி சிவில் கோர்ட்டில் சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள பவித்ரா கவுடா ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். தனது உடல்நிலை மற்றும் மகளின் படிப்பு ஆகியவற்றை காரணங்களாக குறிப்பிட்டு ஜாமீன் வழங்க வேண்டும் என்று அவர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால், வழக்கில் முக்கியமான சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்று வருவதால் பவித்ரா கவுடாவுக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்கவோ அல்லது வழக்கு விசாரணையில் தாக்கத்தை ஏற்படுத்தவோ வாய்ப்பு இருப்பதாக அரசு தரப்பு வக்கீல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சுஜாதா, பவித்ரா கவுடாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதற்கிடையே, இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக மாறியுள்ள பிரதோஷ், ரேணுகாசாமி கொலை தொடர்பாக நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கு விசாரணையில் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ரேணுகாசாமி கொலை வழக்கில் தர்ஷன், பவித்ரா கவுடா உள்ளிட்டோருக்கு எதிராக நடைபெற்று வரும் விசாரணை தொடர்ந்து கவனம் பெற்றுள்ளது.
