சென்னை: தீபாவளியை முன்னிட்டு ஆன்லைன் பட்டாசு விற்பனை என்ற பெயரில் நடைபெறும் மோசடிகளில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அமைச்சர் கீர்த்தனா அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், குறைந்த விலை மற்றும் சிறப்பு சலுகைகள் என்ற பெயரில் வெளியிடப்படும் கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி, அறிமுகமில்லாத இணையதளங்களில் முன்கூட்டியே பணம் செலுத்த வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
சில போலி இணையதளங்கள் மற்றும் இணைப்புகள் மூலம் பணத்தைப் பெற்று பொருட்களை அனுப்பாமல் மோசடி செய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதால், பொதுமக்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சந்தேகத்திற்கிடமான இணையதளங்கள், தொலைபேசி அழைப்புகள் மற்றும் இணைப்புகளைத் தவிர்த்து, நம்பகமான வழிகளில் மட்டுமே பொருட்களை வாங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
1930-ல் புகார்
ஆன்லைன் மோசடி அல்லது சைபர் குற்றத்தால் பாதிக்கப்பட்டால், தாமதிக்காமல் 1930 என்ற சைபர் குற்றப்புகார் உதவி எண்ணை தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம்.
தீபாவளி விற்பனையை பயன்படுத்தி பொதுமக்களின் பணத்தை மோசடி செய்யும் இணையதளங்களை அடையாளம் கண்டு தவிர்ப்பது அவசியம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
