சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி அஸ்வத்தாமனை 4 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் வடசென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி நாகேந்திரனின் மகனும், காங்கிரஸ் முன்னாள் நிர்வாகியுமான அஸ்வத்தாமன் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.
அவரை 7 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி செம்பியம் காவல் நிலைய ஆய்வாளர் எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பூந்தமல்லி சிறையில் இருந்த அஸ்வத்தாமன் பலத்த பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்டார்.
மனுவை விசாரித்த நீதிமன்றம், அஸ்வதாமனை 4 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தது. இதையடுத்து எழும்பூரில் உள்ள ரெய்டர்ஸ் தனி அலுவலகத்தில் போலீசார் அஸ்வத்தாமனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் வேலூர் சிறையில் உள்ள ரவுடி நாகேந்திரனும் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நீதிமன்ற காவலுக்காக எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று (புதன்கிழமை) ஆஜர்படுத்தப்படுகிறார்.