காந்திநகர்: இஸ்ரேல் நோக்கிச் சென்ற விமானப் பயணத்தின்போது துணிச்சலுடன் செயல்பட்டு 174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றியதாக கூறப்படும் குஜராத் வம்சாவளியைச் சேர்ந்த விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு ‘விஷிஷ்ட் குஜராத் கரிமா புரஸ்கார்’ விருது வழங்கப்படும் என்று குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், இஸ்ரேல் நோக்கிச் சென்ற ஃப்ளைதுபாய் விமானத்தின் விமானியான ஸ்மித் மச்சாரின் துணிச்சல் பாராட்டுக்குரியது என குறிப்பிட்டுள்ளார்.
விமானம் தாக்குதலுக்குள்ளான சூழ்நிலையில், காயமடைந்த நிலையிலும் விமானத்தை கையாள்ந்து 174 பயணிகளின் உயிரை காப்பாற்ற அவர் மேற்கொண்ட நடவடிக்கையை பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்மித் மச்சார் குஜராத்தைச் சேர்ந்தவர் என்றாலும், அவரது குடும்பத்தினர் நீண்ட காலத்துக்கு முன்பே மும்பைக்கு குடிபெயர்ந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அவர் விரைவில் குணமடைய வேண்டி குஜராத் முழுவதும் பிரார்த்தனைகள் நடைபெற்று வருவதாகவும், சோமநாதர் கோயிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் மிருத்யுஞ்சய மந்திர ஜபம் உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெறுவதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
ஸ்மித் மச்சாரின் துணிச்சலை கவுரவிக்கும் வகையில் குஜராத் அரசு சார்பில் விருது வழங்கப்பட உள்ளது.
