மதுரை: பா.ஜ.க , மாநில தலைவர் அண்ணாமலையை அவதூறாக பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மதுரை பா.ஜ.க, நிர்வாகி, போலீசில் புகார் அளித்துள்ளார்.
மதுரை மாநகர மாவட்ட பாஜக துணைத் தலைவர் ராஜ்குமார் எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: மதுரை பரவை பேரூராட்சியில் அதிமுக சார்பில் கடந்த 12ஆம் தேதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் மதுரை மேற்கு தொகுதி எம்எல்ஏ செல்லூர் ராஜூ பேசுகையில், பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை ஒருமையில் தர குறைவாகவும், ஒரு சமுதாயத்தை இழிவு படுத்துகின்ற வகையிலும் விமர்சித்துள்ளார்.
இதனால், பொது இடங்களில் அண்ணாமலையை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். எனவே அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. காளவாசல் மண்டல தலைவர் பிச்சைவேல் தொழில் பிரிவு மாவட்ட செயலாளர் பாலமுருகன் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.