சென்னை: திருவொற்றியூரில் உள்ள பழமையான வடிவுடையம்மன் கோவிலின் ஆதிசேஷ தீர்த்தக் குளத்தில் காய்ந்த புற்கள் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் அரை மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
திருவொற்றியூரில் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில் அமைந்துள்ளது. சுமார் 2,000 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படும் இந்தக் கோவிலுக்கு வெளியே ஆதிசேஷ தீர்த்தக் குளம் உள்ளது. தற்போது குளத்தில் தண்ணீர் இல்லாததால், அதன் அடிப்பகுதியில் புற்கள் காய்ந்த நிலையில் காணப்பட்டன.
இந்நிலையில், நேற்று மாலை குளத்தில் இருந்த காய்ந்த புற்களில் திடீரென தீப்பற்றியது. காற்றின் வேகம் காரணமாக தீ வேகமாகப் பரவியதுடன், அப்பகுதியில் வெண்புகையும் எழுந்தது. இதனால் அப்பகுதியில் இருந்தவர்கள் அச்சமடைந்தனர்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் திருவொற்றியூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். தீப்பற்றியதற்கான காரணம் குறித்து தகவல் வெளியாகவில்லை. பழமையான கோவில் வளாகத்தில் உள்ள குளம் வறண்டு கிடப்பதால், அங்கு காய்ந்த புற்கள் தேங்காமல் பராமரிப்பது அவசியம் என்ற கருத்தும் எழுந்துள்ளது.
