நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குநர் மிஷ்கின் இயக்கியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் டிசம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.
கலைப்புலி எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் சுருதி ஹாசன், கே.எஸ். ரவிக்குமார், கலையரசன், யுகி சேது, நரேன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் இயக்குநரான மிஷ்கினே இசையமைத்துள்ளார்.
ஒரே இரவில் ரெயிலில் நடைபெறும் மர்மச் சம்பவங்களை மையமாகக் கொண்ட திரில்லர் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், படத்தின் டீசரும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
‘கன்னக்குழிக்காரா’ என்ற முதல் பாடலை சுருதி ஹாசன் பாடியுள்ளார். நீண்டகாலமாக வெளியீட்டுக்காகக் காத்திருந்த இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டிருப்பது விஜய் சேதுபதியின் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
