மாட்ரிட்: ஸ்பெயினின் டோலிடோ மாகாணத்தில் உள்ள உர்டா அருகே இரண்டு அதிவேக ரயில்கள் மோதிய விபத்தில் குறைந்தது 68 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் பலர் காயமடைந்துள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து ஸ்பெயினின் அதிவேக ரயில் போக்குவரத்து பாதுகாப்பு குறித்து பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
மாட்ரிட்டில் இருந்து செவில்லே நோக்கிச் சென்ற ரயில், தண்டவாளத்தில் ஏற்கெனவே நின்றிருந்த மற்றொரு ரயிலின் பின்புறத்தில் மோதியது. இரு ரயில்களிலும் நூற்றுக்கணக்கான பயணிகள் இருந்தனர். மோதலின் தாக்கத்தில் பெட்டிகள் தடம் புரண்டதுடன், சில பெட்டிகள் கடுமையாகச் சேதமடைந்தன. மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
ரயில் பாதுகாப்பு அமைப்பில் ஏற்பட்ட கணினிக் கோளாறு விபத்துக்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது. பாதுகாப்பு அமைப்பு செயலிழந்த நிலையில், கட்டுப்பாட்டு மையம் ரயிலை மீண்டும் இயக்க அனுமதித்தது தொடர்பாகவும் கேள்விகள் எழுந்துள்ளன. ரயிலின் வேகம், சிக்னல் செயல்பாடு, கட்டுப்பாட்டு மையத்தின் முடிவுகள் ஆகியவை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து, மூன்று நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். மாட்ரிட் மற்றும் தெற்கு ஸ்பெயின் இடையிலான சில ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டன. இந்த ஆண்டில் ஸ்பெயினில் நிகழ்ந்த மற்றொரு கொடிய ரயில் விபத்துக்குப் பிறகு மீண்டும் இத்தகைய பேரழிவு ஏற்பட்டிருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
