பிரஸ்ஸல்ஸ்: குளிர்காலம் நெருங்கும் நிலையில், எரிபொருள் விலையேற்றம் மற்றும் எரிசக்தி விநியோகப் பாதிப்புகளைச் சமாளிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் எரிசக்தி அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய கிழக்கு மற்றும் உக்ரைன் தொடர்பான மோதல்கள் உலகச் சந்தையில் எண்ணெய், இயற்கை எரிவாயு விலைகளை உயர்த்தி வருவது ஐரோப்பிய நாடுகளுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யா–உக்ரைன் போர், ஈரான் தொடர்பான மோதல் மற்றும் ஏமனில் அதிகரிக்கும் தாக்குதல்கள் ஆகியவை முக்கியமான கடல்வழிப் போக்குவரத்து பாதைகளில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ளன. கருங்கடல், செங்கடல் மற்றும் ஹார்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் எரிசக்தி விநியோகம் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் சந்தையில் நிலவுகிறது.
ஐரோப்பிய நாடுகளின் இயற்கை எரிவாயு சேமிப்பு அளவு 75 சதவீதமாக இருப்பதாகவும், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் அது 83 சதவீதமாக இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மொத்த விற்பனைச் சந்தையில் இயற்கை எரிவாயு விலை மெகாவாட் மணி நேரத்துக்கு 100 யூரோக்களை எட்டியது. இது 2022 டிசம்பருக்குப் பிறகான மிக உயர்ந்த நிலையாகும்.
மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்காக வரி விதிப்பு மற்றும் மின்விநியோகக் கட்டணங்களில் மாற்றங்கள் செய்வது குறித்தும் ஐரோப்பிய ஆணையம் ஆலோசித்து வருகிறது. இயற்கை எரிவாயுவுடன் ஒப்பிடும்போது மின்சாரத்துக்கு குறைந்த வரி விதிப்பது போன்ற யோசனைகளும் பரிசீலிக்கப்படுகின்றன.
மேலும், அவசரகால எண்ணெய் இருப்பிலிருந்து 40 கோடி பீப்பாய்களுக்கு மேல் எண்ணெயை விரைவாகச் சந்தைக்குக் கொண்டுவர மேற்கத்திய நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன. இருப்பினும், விநியோகப் பாதுகாப்பு உடனடியாக ஆபத்தில் இல்லை என்று ஐரோப்பிய ஆணையம் தெரிவித்துள்ளது.
எரிசக்தி விலை உயர்வு குடும்பங்கள், தொழிற்சாலைகள் மற்றும் சிறு நிறுவனங்களின் செலவுகளை அதிகரிப்பதால், குளிர்காலத்தை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
