நீண்டகாலமாகத் தொடர்ந்து வரும் ரஷ்யா – உக்ரைன் போரில் முக்கியமான மனிதாபிமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளின் பிரதிநிதிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் அமெரிக்க மத்தியஸ்தத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
பல மாதங்களுக்குப் பிறகு நடைபெற்ற இந்த நேரடிப் பேச்சுவார்த்தையில் கைதிகள் பரிமாற்றம், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் போரின்போது கைது செய்யப்பட்ட குழந்தைகள் உள்ளிட்டவர்களைத் திருப்பி அனுப்புவது போன்ற விவகாரங்கள் பேசப்பட்டுள்ளன.

பெரிய அளவிலான போர்க்கைதிகள் பரிமாற்றத்திற்கு இரு தரப்பும் ஒப்புதல் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த முயற்சியில் அமெரிக்க பிரதிநிதிகளும் ஐக்கிய அரபு அமீரகமும் முக்கியப் பங்காற்றியுள்ளன.
எனினும், போர் நிறுத்தம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே இன்னும் கருத்து வேறுபாடுகள் நீடிக்கின்றன. உக்ரைனின் பிராந்திய எல்லைகள், பாதுகாப்பு உத்தரவாதங்கள் மற்றும் நேட்டோ உறுப்பினர் விவகாரம் ஆகியவை பேச்சுவார்த்தையில் முக்கியத் தடைகளாக உள்ளன. கைதிகள் பரிமாற்றம் முன்னேற்றமாக இருந்தாலும் நிரந்தர அமைதிக்கு இன்னும் நீண்ட பாதை இருப்பதாகக் கருதப்படுகிறது.
