ஜெனிவா: குரங்கம்மை பரவல் குறித்து சர்வதேச சுகாதார அவசரகால நிலையை உலக சுகாதார அமைப்பு பிறப்பித்ததுள்ளது.
ஆப்பிரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில், குரங்கம்மை காய்ச்சல் பொது சுகாதார அவசரகால நிலையாக உருவாகி உள்ளது. 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். அதனால், இதனை தடுத்து நிறுத்த சர்வதேச உதவி வேண்டும் என கேட்டு கொண்டுள்ளது.
இதன்படி, நடப்பு ஆண்டில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என 13 நாடுகளில் குரங்கம்மை கண்டறியப்பட்டு உள்ளது. இவற்றில் காங்கோ நாட்டில் 96 சதவீதம் அளவுக்கு பாதிப்புகளும் மற்றும் மரணங்களும் ஏற்பட்டு உள்ளன.
கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, காங்கோவில் பாதிப்புகள் 160 சதவீதமும், மரணங்கள் 19 சதவீதமும் உயர்ந்து உள்ளன. இதுவரை 524 பேர் பலியாகி உள்ளனர். 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன என்றும் தெரிவித்து இருந்தது.
ஆப்பிரிக்க நாடுகளில் புது வடிவிலான வைரசானது பரவி வருகிறது. காங்கோவில் இருந்து புரூண்டி, கென்யா, ருவாண்டா மற்றும் உகாண்டா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கும் பரவியுள்ளது. எனினும், ஆப்பிரிக்காவில் குறைந்த தடுப்பூசி டோஸ்களே இருப்பில் உள்ளன.
இதுபற்றி உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானம் கெப்ரியேசஸ் கூறும்போது, நாம் அனைவரும் கவலைப்பட வேண்டிய விசயம். இந்த வைரசானது ஆப்பிரிக்காவை கடந்து பரவ கூடிய ஆற்றல் படைத்துள்ளது என்பது அதிக வருத்தத்திற்குரியது என்று கூறியுள்ளார்.
இந்த சூழலில் உலக சுகாதார அமைப்பு, குரங்கம்மையை சர்வதேச சுகாதார அவசரகால நிலையாக அறிவித்து உள்ளது.