லிபியாவின் பெங்காசி கடற்படைத் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரஷ்யக் கடற்படைக்குச் சொந்தமான மெர்குரி என்ற போர்க்கப்பலில் வெடிப்பு ஏற்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதற்கட்ட விசாரணையில் ஆளில்லா கடல் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என லிபியாவின் கிழக்குப் பகுதி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் கப்பல் கடுமையாகச் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.
ஆறு ட்ரோன்கள் கப்பலை இலக்காகக் கொண்டதாகவும், அவற்றில் நான்கு தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், இரண்டு கப்பலைத் தாக்கியதாகவும் லிபிய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கப்பலில் இருந்த ரஷ்யர்கள் மற்றும் லிபியர்கள் காயமடைந்ததாகவும், அவர்களுக்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கப்பலின் பெரும்பகுதி கடலில் மூழ்கியிருப்பதாக செயற்கைக்கோள் படங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் எந்த அமைப்பு உள்ளது என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. ரஷ்யாவும் உக்ரைனும் உடனடியாக அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கவில்லை. சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று லிபியா வலியுறுத்தியுள்ளது.
