புதுச்சேரி: கொல்கத்தாவில் பெண் மருத்துவர் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் இன்று காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வெளிநோயாளர் சேவை இல்லை. அதே நேரத்தில் அவசர சிகிச்சை, ஐசியூ மற்றும் டெலிவரி பிரிவுகள் செயல்பட்டன.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனை வளாகத்தில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு நாடு முழுவதும் மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இச்சம்பவத்தைக் கண்டித்தும், குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்யக் கோரியும், நாடு முழுவதும் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மருத்துவ மாணவர்கள் நேற்றுமுன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து ஜிப்மரில் பணிபுரியும் 900-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், செவிலியர் ஊழியர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினர். இதனால், புறநோயாளிகள் பிரிவு செயல்படவில்லை. அதே நேரத்தில் அவசர சிகிச்சை, ஐசியூ மற்றும் டெலிவரி பிரிவுகள் செயல்பட்டன. போராட்டத்தில் கலந்து கொண்ட மருத்துவர்கள் கூறுகையில், ‘‘மத்திய அரசு மருத்துவர்களுக்கான பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம். ஆஸ்பத்திரியில் தூங்கிய டாக்டருக்கு இந்த பிரச்னை இருந்ததால், எதிர்காலத்தில் அசதி ஏற்பட்டால் ஓய்விற்காக மருத்துவமனையில் தூங்கவே பயப்படுகிறோம்.
பாதுகாப்பு இல்லை. மருத்துவர்களை யார் வேண்டுமானாலும் தாக்கலாம் என்ற நிலை உள்ளது. மருத்துவர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க கடுமையான சட்டங்கள் தேவை. மக்கள் எங்களின் கோரிக்கையை புரிந்து ஆதரவு தர வேண்டும்,” என்றார்.ஜிப்மர் குடியிருப்பு டாக்டர்கள் சங்க துணை தலைவர் சந்தோஷினி, பொதுச்செயலாளர் ஷோபனா கூறுகையில், ”ஜிப்மரில் உள்ள புறநோயாளிகள், ஆபரேஷன் தியேட்டர்களில் காலவரையற்ற சேவையை நிறுத்தி, போராட்டத்தை துவக்கி உள்ளோம். அவசர சேவைகள், அவசரகால ஆய்வக சேவைகள், டயாலிசிஸ், புற்றுநோய் கீமோதெரபி பிரிவுகள் மற்றும் ஐசியூ ஆகியவை வழக்கம் போல் செயல்படும்.
சமீபத்திய சம்பவம் குறித்த விசாரணையில் சந்தேகம் எழுந்துள்ளது. வெளிப்படையான விசாரணை தேவை. சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். பெண் மருத்துவரின் கண்ணியத்தையும் உயிரையும் பாதுகாக்கத் தவறிய பொறுப்புள்ள அதிகாரிகள் அனைவரும் பதவி விலக வேண்டும். சுகாதாரத்துறையில் உள்ள அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது,” என்றார்.
ஜிப்மர் மாணவர் சங்கத் தலைவர் பாரதி, துணைத் தலைவர் தர்ஷினி கூறுகையில், “”டாக்டர்கள் போராட்டத்திற்கு மாணவர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்.இந்நிலையை கருத்தில் கொண்டு எம்.பி.பி.எஸ்., செவிலியர் மற்றும் அதுசார்ந்த சுகாதாரத்துறை மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டோம். இந்த காலகட்டத்தில் நாங்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் பணிபுரியும் மருத்துவ சேவைகளைத் தவிர வேறு சேவைகளில் பணியாற்ற மாட்டோம். என்று கூறினார்கள்.