சென்னை: தமிழ்நாடு வெற்றிக் கழகம் கட்சியின் கொடியை ஆகஸ்ட் 22-ம் தேதி சென்னையில் நடிகர் விஜய் துவக்கி வைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழ்நாடு வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கினார். டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்திடம் கட்சியின் பெயரையும் பதிவு செய்தார்.
உறுப்பினர் சேர்க்கை, நிர்வாகிகள் நியமனம் உள்ளிட்ட கட்சிப் பணிகளில் தீவிரமாக இருந்தார். இந்நிலையில் விஜய் தனது முதல் அரசியல் மாநாட்டை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார். அதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணி தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. இதையடுத்து மதுரையில் மாநாடு நடைபெறும் என முதலில் தகவல் வெளியானது. ஆனால், திருச்சியில் ரயில்வேக்கு சொந்தமான ஜி கார்னர் மைதானத்தில் மாநாடு நடத்துவது குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் பஸ்சி என்.ஆனந்த் ஆய்வு செய்தார்.
பின்னர், மாநாடு நடத்த இடம் போதுமானதாக இல்லை எனக்கூறி, சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாநாடு நடத்த இடம் தேடும் பணி தொடர்ந்தது. விக்கிரவாண்டியில் மாநாடு? – இதனிடையே விஜய் மாநாடு நடத்த இடம் கிடைக்காத பிரச்சனைக்கு பிரபல அரசியல் கட்சியின் தலையீடுதான் காரணம் என தவேக நிர்வாகிகள் சிலர் குற்றம்சாட்டினர். அதன்படி சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விக்கிரவாண்டி அருகே பல ஏக்கர் காலி இடத்தை பஸ்சி என்.ஆனந்த் தேர்வு செய்து செப்டம்பர் 22ம் தேதி அங்கு மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மாநாட்டுக்கு முன்னதாக கட்சி கொடி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 22ம் தேதி பனையூரில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் முன்னிலையில் விஜய் கொடியை அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.இந்த கொடி 2 வண்ணங்களில் 3 வகைகளில் வடிவமைக்கப்பட்டு அதில் ஒன்றை விஜய் தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவர் அதை அறிமுகப்படுத்தப் போகிறார்.
இதுகுறித்து கட்சி நிர்வாகிகளிடம் கேட்டபோது, ’விக்கிரவாண்டியில் ஆலோசனை கூட்டம், கட்சி கொடி அறிமுகம், பொதுக்கூட்டம் குறித்து இதுவரை தலைமையிடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை’ என்றனர்.