சென்னை: வேக, வேகமாக, பரபரப்பாக உள்ள வாழ்க்கையாக இக்காலக்கட்டம் மாறிவிட்டது. உணவை கூட ரசித்து ருசித்து சாப்பிட முடியாத நிலை. அவசர அவசரமாக பாஸ்ட் புட்களை கூட பாஸ்ட்டாக சாப்பிடுகிறோம்.
பரபரப்பான வாழ்க்கையில் சாப்பிடக்கூட நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம். ஆனால், உடலில் சக்தி உற்பத்தியாவதற்கும் செல்கள் வளர்ச்சியடைவதற்கும் உடல் உறுப்புகள் ஆரோக்கியமாகச் செயல்படுவதற்கும் உணவே காரணமாகிறது.
அந்த உணவைத் தேர்ந்தெடுப்பதில் நாம் கவனம் கொள்ள வேண்டியது அவசியம். ஆரோக்கியமான இயற்கை உணவுகளைத் தேர்வுசெய்தல், உடலில் சேர்ந்துள்ள அதீத கொழுப்பைக் குறைக்கும் வழிகள், சாப்பிட்ட பிறகு செய்யக் கூடாத விஷயங்கள் பற்றி அறிந்துகொள்ள வேண்டும்.
இயற்கை வைத்தியத்தில் தாதுஉப்புகள் அதிகம் உள்ள இளங்கீரைகள், புதிதாய்ப் பறித்த இளங்காய்கறிகள், பழங்கள் போன்றவை முதல் தரமான உணவுகளாகும். புரதப் பொருட்கள், மாவுப் பொருட்கள், சர்க்கரைப் பொருட்கள், கொழுப்புப் பொருட்கள் உள்ள தானியங்கள், பயிறுகள், கிழங்குகள், பருப்புகள் ஆகியவை இரண்டாம் தரமான உணவுகள்.
இந்த இரண்டையுமே நமது அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். சத்தான உணவைவிட ஜீரணிக்கும் உணவே உன்னத உணவு. நோயை உண்டாக்காமல் ஜீரணிக்கக்கூடிய உணவையே உட்கொள்ள வேண்டும்.
உங்கள் உடலைப் பற்றிய புரிதல் அவசியம்.வெளியில் தெரியாத நோய்கள், பரம்பரை நோய்கள் பற்றி தெரிந்துவைத்திருத்தல் அவசியம்.நோய் இருப்பின், அதன் தீவிரம், நோயின் வகை, தவிர்க்க வேண்டிய உணவுகள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
பழங்கள், காய்கறிகள், கீரைகள், தேங்காய், முளைகட்டிய தானியங்கள், முளைகட்டிய பயறுகள் ஆகியவை உடலுக்கு ஏற்ற உணவுகள். தினமும் காலை உணவை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளுக்குத் தேவையான முழு சக்தியையும் காலை உணவே அளிக்கிறது. காலை உணவை எப்போதும் தவிர்க்கக் கூடாது.
இரவு மிகக்குறைந்த அளவே சாப்பிட வேண்டும். இரவு முடிந்தவரை அரிசி சாப்பாடைத் தவிர்த்து, கோதுமை, ரவை, ராகி, சிறுதானியங்கள் உட்பட உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது. இதனால், சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.