புதுடெல்லி: உள்நாட்டில் கட்டப்பட்ட 700 மெகாவாட் திறன் கொண்ட 2வது அணு உலை நேற்று முழு கொள்ளளவில் உற்பத்தியை தொடங்கியது. இந்திய அணுசக்தி கழகம் (என்பிசிஎல்) வெளியிட்டுள்ள அறிக்கையில், “குஜராத் மாநிலத்தில் உள்ள கக்ராபார் அணுமின் நிலையத்தில் (கேஏபிஎஸ்) நிறுவப்பட்டுள்ள 4வது அணு உலை முழு கொள்ளளவுடன் உற்பத்தியை தொடங்கியுள்ளது. உள்நாட்டில் கட்டப்பட்ட 2வது 700 மெகாவாட் அணு உலை இது. முதல் 700 மெகாவாட் அணு உலை ஏற்கனவே அதே ஆலையில் (3வது) இயங்கி வருகிறது,” என்று அது கூறியது.
கேபிஎஸ்-4 அணு உலை கடந்த ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி முறைப்படி சோதனை செய்யப்பட்டது. மார்ச் 31-ம் தேதி வணிக ரீதியிலான உற்பத்தியைத் தொடங்கும் அளவுக்கு வெற்றிகரமாக இருந்தது. அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தின் ஒப்புதலுடன் அதன் உற்பத்தி திறன் படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. இது இப்போது முழு திறனில் இயங்கி வருகிறது. அதே வடிவமைப்பில் மேலும் 14 அணு உலைகளை (700 மெகாவாட்) என்பிசிஎல் உருவாக்குகிறது.
24 அணு உலைகள் இப்போது நாடு முழுவதும் என்பிசிஎல் கீழ் இயங்குகின்றன. இதன் மின் உற்பத்தி திறன் 8,180 மெகாவாட் ஆகும். 6,800 மெகாவாட் திறன் கொண்ட 8 அணு உலைகள் கட்டும் பணியும் நடந்து வருகிறது. இது தவிர 7,000 மெகாவாட் திறன் கொண்ட மேலும் 10 அணு உலைகள் அமைப்பதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவை அனைத்தும் செயல்பாட்டுக்கு வந்தால், 2031-32ம் ஆண்டுக்குள் நாட்டின் மொத்த அணுமின் உற்பத்தி திறன் 22,480 மெகாவாட்டாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.