சென்னை: தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:-
மத்திய மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு வங்கக் கடலில் இன்று (ஆகஸ்ட் 29) காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (ஆக.30) மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலவும்.
மேலும் அடுத்த இரண்டு நாட்களில் மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரையை நோக்கி நகரும்.
இதன் காரணமாக இன்றும், நாளையும் (ஆகஸ்ட் 30) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், மணிக்கு 30 முதல் 40 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 4 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 35 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 முதல் 29 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், இன்று (ஆகஸ்ட் 29) முதல் செப்டம்பர் 2-ம் தேதி வரை தமிழக கடலோரப் பகுதிகள், வங்கக் கடல் மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளதாகவும், மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.