துபாய்: ‘ஸ்லீப் அப்னியா’ நோயால் பாதிப்பு… துபாயில், 21 சதவீதம் பேர் ‘ஸ்லீப் அப்னியா’ நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து மருத்துவ நிபுணர்கள் வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
தூக்கத்தின்போது ஏற்படும் மூச்சுத்திணறல் மருத்துவத்துறையில் ஸ்லீப் அப்னியா என அழைக்கப்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட நபருக்கு அவர் ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்லும்போது அவரது மேல் மூச்சுப்பாதையில் அடைப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு சரியாக தூங்க முடியாமல் போகிறது.
சில நேரங்களில் மூளையில் இருந்து தசைகளுக்கு சரியான சிக்னல்கள் செல்லாவிட்டாலும் ஸ்லீப் அப்னியா ஏற்படும். இந்த நோயால் பெண்களை விட ஆண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதனை ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சை எடுத்துக்கொண்டு சரி செய்யாவிட்டால் ரத்த நாளங்கள் தொடர்பான நோய்கள் வரும்.
இந்த நோயின் கொடுமை என்னவென்றால் இப்படி ஒரு நோய் தங்களுக்கு இருப்பதே தெரியாமல் இருப்பதுதான். இதில் வெளியில் தெரியக்கூடிய அறிகுறிகளை கூட பெரும்பாலானோர் பெரிதாக கருதுவது இல்லை. ஸ்லீப் அப்னியா உள்ளவர்களுக்கு அதிகமான பகல் நேர தூக்கம் உண்டாகும். அதற்கு அடுத்த படியாக சத்தமான குறட்டையுடன் அயர்ந்து தூங்குவது ஆகும். மூச்சுத்திணறல், காலையில் தலைவலி அல்லது எரிச்சலான மனநிலை, வேலையில் கவனக்குறைபாடு, வாய் வறட்சி, இரவு முழுவதும் தூக்கமின்மை போன்ற அறிகுறிகள் ஏற்படும்.
ஸ்லீப் அப்னியா மிதமானது முதல் கடுமையானது வரை பாதிப்பை ஏற்படுத்தலாம். சில நேரங்களில் உயிரை பறிக்கும் அளவுக்கு செல்லலாம். இந்த நோய்க்கு சிபிஏபி என்ற தானியங்கி எந்திரத்தை பயன்படுத்தி தூக்கத்தின்போது மூக்கில் ஏற்படும் காற்றழுத்தத்தை சீராக வைத்து சுவாசப்பாதையில் மூச்சடைப்பு ஏற்படாமல் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
துபாயில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களில் பாலின வேறுபாடின்றி துபாயில் வசிக்கும் 21 சதவீதத்தினரில் 51 வயது முதல் 60 வயதுடையவர்கள் ஸ்லீப் அப்னியா எனப்படும் தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத்திணறல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.