ஓசூர்: கர்நாடகா மாநிலம் பொம்மசந்திரத்தில் இருந்து அத்திப்பள்ளி வழியாக ஓசூர் வரை மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தமிழகத்தில் 11 கி.மீ., கர்நாடகாவில் 12 கி.மீ. மொத்தம் 23 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஓசூர்-பெங்களூரு இடையே விரைவான போக்குவரத்தை வழங்கும் திட்டத்திற்கு இருமாநில தொழில்முனைவோர் மற்றும் தொழிலாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் நேற்று ஓசூர் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட சலுவலி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை மறியலிலும் ஈடுபட்டனர். ஓசூரை இணைக்க வேண்டும்…பின்னர், வாட்டாள் நாகராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஓசூர், உதகை, கர்நாடகா மாநிலத்துடன் இணைக்கப்பட வேண்டும். ஆனால் காமராஜர் ஆட்சியில் இந்தப் பகுதிகள் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டன. எனவே ஓசூரை கர்நாடகா மாநிலத்துடன் இணைத்த பிறகே மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதி வழங்குவோம்.
மேகதாதுவில் அணை கட்ட மத்திய, கர்நாடக அரசு நிதி ஒதுக்காவிட்டால் மக்களிடம் நிதி வசூலித்து அணை கட்டுவோம். ஓசூரில் விமான நிலையம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். அது நடக்காது.
கேரள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் இருப்பது போல், கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநில திரையுலகிலும் பாலியல் தொல்லைகள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து வாட்டாள் நாகராஜ் உள்பட 50 பேரை கர்நாடக மாநில போலீசார் கைது செய்தனர். போராட்டம் காரணமாக தமிழக எல்லையான ஜூஜூவாடியில் தமிழக வாகனங்கள் சிறிது நேரம் நிறுத்தப்பட்டன. மறியல் போராட்டம் கைதான பிறகு அனைத்து வாகனங்களும் அனுமதிக்கப்பட்டன.