ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே வைகை அணை உள்ளது. தேனி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான வைகை அணைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் நேற்று வைகை அணை பூங்காவிற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் குடும்பத்துடன் திரண்டனர். நேற்று ஆண்டிபட்டி பகுதியில் வெயில் அதிகம் இல்லாமல் இதமான காலநிலை நிலவியதால் ஏராளமானோர் பார்வையிட்டனர்.
தற்போது ஆற்றில் தண்ணீர் வருவதால், பாலம் பகுதியில் ஏராளமானோர் நின்று அணையில் இருந்து வரும் தண்ணீரை பார்த்து மகிழ்ந்தனர். பூங்கா பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ஊஞ்சல் மற்றும் சறுக்குகளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விளையாடி மகிழ்ந்தனர்.
அவர்களும் குழந்தைகளுக்கான ரயிலில் உற்சாகமாக குடும்பத்துடன் பயணம் செய்து தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர். பூங்காவின் புல்வெளியில் குடும்பத்தினர் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
வைகை அணை பூங்காவில் பொழுதுபோக்கு அம்சங்கள் அதிகம் என்பதால் காலை முதல் மாலை வரை மக்கள் கூட்டம் அலைமோதியது. பெண்களை பாதுகாக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் நாட்களில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட வேண்டும் என பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வைகை அணை வலதுகரை பூங்கா பகுதியில் அமைக்கப்பட்ட இசை நாட்டிய நீரூற்று சேதமடைந்த நிலையில் உள்ளதால் அங்கு வந்த சுற்றுலா பயணிகள் இசை நடன நீரூற்றை பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
மேலும் வைகை அணை பூங்காவை பராமரிக்க பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தேனி மற்றும் ஆண்டிபட்டியில் இருந்து விடுமுறை நாட்களில் கூடுதல் சிறப்பு பஸ்களை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.