சென்னை: வங்கக் கடலில் நாளை காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும். இதன் காரணமாக தமிழகத்தில் வரும் 9-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகத்தில் ஏற்பட்ட மாற்றத்தால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று 13 மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. இதனிடையே நேற்று பெரும்பாலான மாவட்டங்களில் சராசரியாக 100 டிகிரி வெப்பம் நிலவியது.
மேலும், ஆந்திரா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடலில் 5-ம் தேதி (நாளை) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.
இந்த நிகழ்வின் காரணமாக புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். வரும் 9-ம் தேதி வரை இதே நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழக கடலோரப் பகுதியைப் பொறுத்த வரையில் மன்னார் வளைகுடா, தென் தமிழகக் கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள குமரி கடல் பகுதிகளில் இன்று முதல் 7-ம் தேதி வரை மணிக்கு 55 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும்.
இதேபோல், மத்திய வங்கக்கடலில் தெற்கு வங்கக்கடல் மற்றும் வடக்கு ஆந்திர கடற்கரை, அந்தமான் கடல் பகுதிகளில் இன்று மணிக்கு 55 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். 5 மற்றும் 6-ம் தேதிகளில் மத்திய மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் அவ்வப்போது மணிக்கு 45 கிமீ முதல் 55 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும்.
எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.