சென்னை: ஒரே நாளில் இரு ஸ்வீட் செய்திகள்… தமிழக வெற்றிக்கழகத்தை அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையம் பதிவு செய்துள்ள நிலையில் முதல் மாநாட்டுக்காக அனுமதியையும் தமிழக போலீசார் வழங்கி உள்ளது. ஒரே நாளில் இரண்டு இனிப்பான செய்திகள் கிடைத்ததால் அக்கட்சி தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
அரசியலுக்கு வருவேன், தேர்தலில் களம் காண்பேன் என்று அறிவித்து கட்சியை ஆரம்பித்தவர் நடிகர் விஜய். தமது கட்சிக்கு தமிழக வெற்றிக்கழகம் என்று பெயர் வைத்தார். 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை இலக்காக கொண்டு கட்சி செயல்படும் என்று கூறி ரசிகர்களையும், தமது ஆதரவாளர்களையும் உற்சாகப்படுத்தினார்.
கட்சியின் மாநாடு விக்கிரவாண்டியில் நடத்த திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் கவனித்து வருகிறார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சாலையில் மாநாட்டை நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டு காவல்துறை அனுமதி வேண்டி முறைப்படி விண்ணப்பமும் அளிக்கப்பட்டது.
கடந்த 28ம் தேதி மனு அளித்துள்ள நிலையில் காவல்துறை அனுமதிக்காக பல நெருக்கடிகளை த.வெ.க., சந்தித்ததாக கூறப்படுகிறது. மொத்தம் 21 கேள்விகளை கேட்டு அதற்கான பதில்களையும் காவல்துறை தரப்பில் கேட்கப்பட்டது. மாநாட்டுக்கு ஒரு புறம் இடைஞ்சல் தரவே இப்படி கேட்கப்படுவதாக கூறப்பட்டாலும் முறைப்படி உரிய விளக்கத்தையும் அளித்து விட்டதாகவும், மாநாடு நிச்சயம் நடைபெறும் என்றும் புஸ்சி ஆனந்த் அறிவித்திருந்தார்.
அவரின் அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் தெம்பை ஏற்படுத்தி இருந்தாலும், முறையான அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையம் த.வெ.க.,வை அங்கீகரித்துள்ளது. அதே நேரத்தில் கட்சி மாநாட்டுக்கு அதிகாரப்பூர்வ அனுமதியையும் போலீசார் வழங்கி உள்ளனர். ஒரே நாளில் இரண்டு சூப்பர் அறிவிப்புகள் த.வெ.க., முகாமை கொண்டாட வைத்திருக்கிறது.