சென்னை: புரோ கபடி 11வது சீசன் ஐதராபாத்தில் அக்டோபர் 18-ம் தேதி தொடங்க உள்ளது. இம்முறை கேரவன் மாடலில் புரோ கபடி நடக்கிறது. இதன் காரணமாக ஹைதராபாத், நொய்டா, புனே ஆகிய 3 நகரங்களில் மட்டும் போட்டிகள் நடைபெற உள்ளன.
12 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரின் முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அக்டோபர் 19-ம் தேதி தெலுங்கு டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி இரவு 8 மணிக்கு நடைபெறும்.
இந்நிலையில் இந்த சீசனுக்கான கேப்டனை அறிவிக்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. கடந்த சீசனில் அணியை வழிநடத்திய சஹரத்தி இம்முறையும் கேப்டனாக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும், சாஹில் குலியா, சச்சின் தன்வார் ஆகியோர் துணை கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் கலந்து கொண்ட தமிழ் தலைவாஸ் அணியின் கள உத்தி பயிற்சியாளர் சேரலாதன் தர்மராஜ் கூறும்போது, “இந்த சீசனில் எங்கள் அணியில் தமிழக வீரராக அபிஷேக் இடம் பெற்றுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த மேலும் 2 வீரர்களை சேர்க்க போட்டி அமைப்பாளர்களிடம் அனுமதி கேட்டுள்ளோம். இதுவரை தமிழ் தலைவாஸ் அணி கோப்பையை வெல்லவில்லை. இந்த முறை கோப்பையை வெல்வதை இலக்காகக் கொண்டுள்ளோம்.
அதை நோக்கி அணியை வலுவாக கட்டமைத்துள்ளோம். கடந்த சீசனின் பலவீனங்களை சரி செய்துள்ளோம். வலது மற்றும் இடது பக்க ரைடர்களை பலப்படுத்தியுள்ளோம். இதனால்தான் வலது பக்க ரைடரான சச்சின் தன்வரை அழைத்து வந்துள்ளோம்.
கடந்த ஆண்டு கவர் ஏரியாவிலும் நாங்கள் பலவீனமாக இருந்தோம். இதையும் சரி செய்துள்ளோம்,” என்றார்.
தலைமை பயிற்சியாளர் உதயகுமார் கூறுகையில், ”ஒவ்வொரு அணியிலும் சிறு குறைகள் இருக்கும். இருப்பினும், வலுவான அணியுடன், அவர்கள் அரையிறுதிக்கு முன்னேற முடியும். ஆனால் இறுதிப் போட்டிக்கு சென்று கோப்பையை வெல்ல வேண்டுமானால், அணி சமநிலையில் இருக்க வேண்டும்.
அப்படித்தான் இம்முறை அணியை உருவாக்கியுள்ளோம். அனைத்து பகுதிகளுக்கும் சரியான வீரர்களை தேர்வு செய்துள்ளோம். கோப்பையை வெல்வது உறுதி. சச்சின் தன்வார் சிறந்த ரைடர். இந்த சீசனில் மட்டும் 200 புள்ளிகளுக்கு மேல் குவிப்பார்’’ என்றார்.