சென்னை: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பில் தொடர் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து டிடோஜாக் நிர்வாகிகளுடன் தமிழக அரசு கடந்த 6-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தியது. சில கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து அரசு தெரிவித்தது. எனினும், 243 அரசாணையை ரத்து செய்தல் போன்ற எதிர்பார்த்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என டிடோஜாக் அறிவித்தார்.
இதையடுத்து இந்த கூட்டமைப்பை சேர்ந்த 12 சங்கங்களை சேர்ந்த ஆசிரியர்கள் தமிழகம் முழுவதும் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள் முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை எழும்பூரில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி துணைப் பொதுச் செயலாளர் சாந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆசிரியர்களின் போராட்டத்தால் கற்றல், கற்பித்தல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஆசிரியர்கள் இல்லாததால் சில பள்ளிகள் மூடப்படுவதாகவும் கூறப்படுகிறது. டிடோஜாக் நிர்வாகிகள் கூறுகையில், “தமிழகம் முழுவதும் 70 சதவீத ஆசிரியர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பள்ளிகளில் இயல்பு நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், அடுத்தகட்ட போராட்டம் நடத்துவோம்,” என்றார். இதனிடையே ஆசிரியர்களின் போராட்டம் காரணமாக தொடக்கக் கல்வித்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆசிரியர்கள் இல்லாத அருகில் உள்ள பள்ளிகளில் இருந்து ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டு கற்பித்தல் தொடர்ந்தது. சில பள்ளிகளில், ‘இல்லம் தேடி கல்வி’ இயக்கத்தின் தன்னார்வத் தொண்டர்களைப் பயன்படுத்தி, எந்தப் பிரச்னையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்கின்றனர் அதிகாரிகள்.
இதுகுறித்து தொடக்கக் கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “தமிழகத்தில் மொத்தம் ஒரு லட்சத்து 22,343 இடைநிலை ஆசிரியர்கள் உள்ளனர். அவர்களில் 84,864 (69.4%) ஆசிரியர்கள் நேற்று பணிக்கு வந்தனர். 37,479 பேர் (30.6%) மட்டுமே வேலைக்கு வரவில்லை.
இருப்பினும், மாற்று ஏற்பாடுகளால் கற்றல்-கற்பித்தல் நடவடிக்கைகள் பாதிக்கப்படவில்லை. அதேபோல், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மீது, ஊதிய உயர்வு உள்ளிட்ட துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
காலாண்டு தேர்வு விடுமுறையான செப்டம்பர் 29, 30 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை டிடோஜாக் நடத்தவுள்ளது.
அதற்கு முன்னதாக பள்ளிக் கல்வித்துறை சார்பில் டிடோஜாக் நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நடைபெற உள்ளது. இதில் உடன்பாடு ஏற்படாவிட்டால் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என்றும் டிடோஜாக் கூறினார்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த பூவத்தூரில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. வழக்கம்போல் நேற்று பள்ளிக்கு வந்த மாணவர்கள் வகுப்பறையில் அமர்ந்திருந்தனர்.
2 தற்காலிக ஆசிரியர்களும் உடனிருந்தனர். வேலைநிறுத்தம் நடந்து வரும் நிலையில், தலைமை ஆசிரியர் உட்பட 4 நிரந்தர ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவில்லை. சிறிது நேரத்தில், அங்கு வந்த துப்புரவு பணியாளர், தலைமை ஆசிரியர் கூறியதாக கூறி, மாணவர்கள் அனைவரையும் வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிவிட்டு, பள்ளியை பூட்டி விட்டு சென்றார்.
இதனால் பள்ளி வராண்டாவில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக மாணவ, மாணவிகள் அமர்ந்திருந்தனர். தகவல் அறிந்து வந்த பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் இது குறித்து கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
கல்வித்துறையினர் வந்து பள்ளியை திறந்தனர். இதுகுறித்து தலைமை ஆசிரியர் கண்ணகியிடம் கேட்டபோது, ”உடல்நிலை சரியில்லாததால் மருத்துவ விடுப்பில் உள்ளேன். வகுப்பறையை பூட்டச் சொல்லவில்லை. பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது,” என்றார்.