புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அமெரிக்காவில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில், அவரது கருத்துகளை எதிர்ப்பதாக கூறினார்.
ராகுல் காந்தி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு இந்தியர்கள் கலந்து கொள்ளும் கூட்டங்களில் கலந்து கொண்டு அவர்களுடன் உரையாடுகிறார்.
கடந்த 9-ம் தேதி வாஷிங்டன் டிசியில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் நடந்த நேர்காணலில் ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது இந்திய அரசியல் குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார்.
அங்கு மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கூறியதாவது: நான் ஒரு உண்மையைச் சொன்னால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். பிரதமர் மோடியை நான் உண்மையில் வெறுக்கவில்லை.
அவர் மீது எனக்கு எந்த வெறுப்பும் இல்லை. அவருடைய கருத்துகளை மட்டுமே நான் எதிர்க்கிறேன். எந்தவொரு விஷயத்திலும் அவர் தனது சொந்தக் கண்ணோட்டத்தைக் கொண்டவர். எனக்கு ஒரு பார்வை இருக்கிறது.
உண்மையில், நான் அவருக்காக வருந்துகிறேன். 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு இருந்த அச்ச உணர்வு இப்போது மறைந்துவிட்டது. 56 அங்குல மார்பு கொண்ட மனிதர் கடவுளுடன் நேரடி தொடர்பு கொண்டவர் என்ற பேச்சு, பிரதமர் மோடியின் கருத்து பழைய கதையாகி விட்டது.
இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. மேற்கத்திய நாடுகளிலும் இந்தப் பிரச்சனை உள்ளது. ஆனால் சீனா, வியட்நாம் போன்ற உலகின் பெரும்பாலான நாடுகளில் இந்தப் பிரச்னை இல்லை.
இந்த பூமியில் வேலைவாய்ப்பு பிரச்சனை இல்லாத பகுதிகள் உள்ளன. அமெரிக்கா உலக உற்பத்தியின் மையமாக இருந்தது.
பின்னர் கொரியா, ஜப்பான் மற்றும் சீனா ஆகியவை உற்பத்தி மையங்களாக மாறியது. சீனா இப்போது உலகளாவிய உற்பத்தி மையமாக குறிப்பிடப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிலையில், வெளிநாடுகளில் இந்தியாவின் தரத்தை குறைக்கும் வகையில் பேசிய ராகுல் காந்திக்கு, பா.ஜ.க., கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா நேற்று கூறுகையில், “ராகுல் காந்தி வெளிநாடுகளில் இந்தியாவை தரக்குறைவாகப் பேசி வருகிறார்.
அவர் முதிர்ச்சியற்ற, பகுதி நேர அரசியல்வாதி என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் என்ற மிகப்பெரிய பொறுப்பை மக்கள் சுமத்தியுள்ளனர். இந்திய ஜனநாயகத்தின் மீது ராகுல் காந்தி ஒரு கரும்புள்ளி என்று கூறுவது வருத்தமாக உள்ளது.