ஹைதராபாத்: தெலங்கானா வெள்ள நிவாரணப் பணிகளுக்காக முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு நடிகரும், ஆந்திர மாநில துணை முதல்வருமான பவன் கல்யாண் ரூ.1 கோடி நன்கொடை அளித்துள்ளார்.
ஹைதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் முதல்வர் ரேவந்த் ரெட்டியை பவன் கல்யாண் புதன்கிழமை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது தெலங்கானா வெள்ள நிவாரணப் பணிகளுக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி காசோலையை பவன் கல்யாண் வழங்கினார்.
ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களுக்கும் 1 கோடி ரூபாய் நிவாரண நிதியை பவன் வழங்கியுள்ளார். முன்னதாக ஆந்திராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 400 கிராம பஞ்சாயத்துகளுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என பவன் கல்யாண் அறிவித்திருந்தார்.
பணம் முறையாக பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதாகவும் அவர் கூறினார். பவன் கல்யாண் – ரேவந்த் ரெட்டி சந்திப்பின் போது, இரு தலைவர்களும் மாநிலங்களுக்கு இடையேயான உறவுகள் மற்றும் பிற விஷயங்கள் குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.
ஆந்திர துணை முதல்வராக பவன் கல்யாணும், தெலுங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டியும் பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.