சென்னை: தமிழகத்தில் கடந்த 5 மாதங்களில் கூடுதலாக வணிக வரி மூலம் 6,091 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது, ஜிஎஸ்டி வசூலும் 17 சதவீதம் அதிகரித்துள்ளது.
நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி வளாக மாநாட்டு அரங்கில், ஆகஸ்ட் மாதத்திற்கான திறனாய்வுக் கூட்டம் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், வணிகவரி புலனாய்வுக் குழுப் பிரிவில் சிறப்பாகப் பணியாற்றி அரசுக்கு அதிக வருவாய் ஈட்டிய கூடுதல் ஆணையர் எஸ்.ஞானகுமார் மற்றும் குழுவினருக்கு அமைச்சர் பி.மூர்த்தி பாராட்டுச் சான்றிதழை வழங்கினார். அப்போது அமைச்சர் பேசியதாவது:-
வணிக வரித்துறை அதிகாரிகளின் செயல்பாடுகள், கண்காணிப்பு மற்றும் செயல்பாடுகளால், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை வணிக வரித்துறையின் மொத்த வரி வருவாய் ரூ.55,807 கோடியாக உள்ளது.
இது, 2023 ஆகஸ்ட் வரை வசூலான ரூ.49,716 கோடியுடன் ஒப்பிடுகையில், இந்த நிதியாண்டின் முதல் 5 மாதங்களில் ரூ.6,091 கோடி அதிகமாகும். சரக்கு மற்றும் சேவை வரி வசூலைப் பொருத்தவரை, இந்த ஆண்டு ஆகஸ்ட் வரை ரூ.31,338 கோடியாக இருந்தது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை வசூலான ரூ.26,767 கோடியுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு வரி வருவாய் 17 சதவீதம் அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். வணிகவரித்துறை ஆணையர் டி.ஜெகந்நாதன், இணை ஆணையர் துர்காமூர்த்தி மற்றும் வணிகவரித்துறை உயர் அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.