சென்னை: சென்னையில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்கவும், மக்களின் போக்குவரத்தை எளிதாக்கவும் மெட்ரோ ரயில் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மெட்ரோ ரயில்களில் பயணிப்பதை தவிர்த்து பார்க்கிங் வசதிக்காக மட்டுமே மெட்ரோ பார்க்கிங்கில் அதிக அளவில் வாகனங்களை நிறுத்துவதால், மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் மக்களுக்கு போதிய பார்க்கிங் வசதி இல்லை. இதன் காரணமாக மெட்ரோ ரயில்களில் பயணிக்காமல் வாகனங்களை நிறுத்துபவர்களுக்கான கட்டணத்தை மெட்ரோ ரயில் நிர்வாகம் உயர்த்தியுள்ளது.
குறிப்பாக சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில் நாள் ஒன்றுக்கு 475 வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. ஆனால் விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் பயணிகளின் வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி இல்லை.
மேலும், பல்லாவரம், பம்மல், குரோம்பேட்டை, முடிச்சூர், சிட்லபாக்கம், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் பயணிகள், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, வடசென்னை, அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு, ஏர்போர்ட் மெட்ரோ ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
சென்னை ஏர்போர்ட் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள பார்க்கிங் பகுதியில் பெரும்பாலானோர் பைக் மற்றும் கார்களை நிறுத்துகின்றனர். மேலும், தென் பிராந்தியங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலைய மெட்ரோ நிலையத்தை பயன்படுத்துகின்றனர் மற்றும் மீனம்பாக்கம் அல்லது நங்கநல்லூர் மெட்ரோ நிலையங்களில் நிறுத்துகின்றனர்.
இந்த இரண்டு நிலையங்களிலும் தேவைக்கேற்ப இடவசதி இல்லாததால் அடிக்கடி வாகனங்கள் நிரம்பி வழிகின்றன. இதனை கருத்தில் கொண்டு பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் வளாகத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் பெரிய வாகன நிறுத்துமிடம் தயார் செய்யப்பட்டு வருவதாக மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மெட்ரோ அதிகாரிகள் கூறியதாவது:-
சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பல்லாவரம் பகுதியில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் பெரிய நிலத்தை மெட்ரோ நிர்வாகம் கண்டறிந்துள்ளது. இந்த நிலத்தில் சுமார் 100 கார்கள் மற்றும் 1500 இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படும்.
மேலும் இந்த பார்க்கிங் பகுதியில் இருந்து விமான நிலைய மெட்ரோ நிலையம் வரை 5 முதல் 10 நிமிடங்களுக்கு இணைப்பு வாகன சேவை இயக்கப்படும். விமான நிலைய மெட்ரோ நிலையம் அருகே நிலம் இல்லாததால் இந்த மாற்று ஏற்பாட்டை அமல்படுத்த வேண்டியுள்ளது.
அடுத்த மாத இறுதிக்குள் வாகனம் நிறுத்த இடம் தயாராகிவிடும். அதேநேரம், இணைப்பு வாகன சேவையை தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதை மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர்.