‘உடன்பிறப்பே’ படத்தை இயக்கிய இரா. சரவணன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் ‘நந்தன்’. இப்படத்தில் ஹீரோயினாக ஸ்ருதி பெரியசாமி நடிக்கிறார், முக்கிய கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனியும், பாலாஜி சக்திவேலும் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது நடைபெற்றுள்ளது, இதில் சசிகுமார், இரா. சரவணன், ஸ்ருதி பெரியசாமி, ஜிப்ரான் உள்ளிட்ட படக்குழுவினர், மற்றும் சீமான், ஹெச். வினோத் போன்றவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய சீமான், “இந்த நிகழ்ச்சியை இசை வெளியீட்டு விழாவாகப் பார்க்கிறதோடு, மண்ணின் மக்கள் பட்ட வலிகளை வெளிப்படுத்தும் விழாவாகக் கூட பார்க்கிறேன்” என்று கூறினார். ‘நந்தன்’ படத்தின் ஒவ்வொரு காட்சியும் கனமாக பதிவு செய்யப்பட்டு, அவருக்கு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக சீமான் தெரிவித்தார்.
அவர், “என் தம்பி சசி கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். புதுமுக நடிகை ஸ்ருதி பெரியசாமி தனது சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சமுத்திரக்கனி மற்றும் பாலாஜி சக்திவேல் அற்புதமாக நடித்துள்ளனர். நான் சமுத்திரக்கனியின் கேரக்டரைப் பார்த்த போது, அந்தக் கேரக்டருக்காக பொறாமைப் படுகிறேன், அந்தக் கதாபாத்திரம் எனக்கே உரியதாகவே தெரிந்தது” என்று கூறினார்.
சீமான், ‘நந்தன்’ படம் தற்காலத்திலும் நம்மைப் போன்ற சகமனிதர்கள் எப்படி ஒடுக்கப்படுகிறார்கள் என்பதைக் கதைக்களமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது என்று குறிப்பிட்டார். “என் தம்பி இரா. சரவணன் துணிந்து இப்படத்தை எடுத்துள்ளார். இது நமக்கு ஒரு காவியம் என்பதைக் காட்டுகிறது” என்று அவர் வாழ்த்தினார்.