சென்னை: புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் நாளை கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
பயணிகளின் நலன் கருதி நாளை கூடுதலாக 50 பேருந்துகள் இயக்கப்படும். தாம்பரம் ரயில் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.
நாளை காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை, சென்னை கடற்கரை – தாம்பரம் ரயில்கள் பல்லாவரம் வரை மட்டுமே இயக்கப்படும்.
தாம்பரத்தில் இருந்து பல்லாவரம் வரை 10 பேருந்துகளும், தியாகராயநகருக்கு 20 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்படும். தாம்பரத்தில் இருந்து பிராட்வே பேருந்து நிலையம் வரை 20 பேருந்துகள் என மொத்தம் 50 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.