லாகூர்: பாகிஸ்தானின் பாபர் அசாம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன் குவிக்க முடியாமல் திணறி வருகிறார். இந்நிலையில், பாபர் அசாம் பேட்டிங்கில் கவனம் செலுத்தி விராட் கோலியிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் யூனிஸ் கான் தெரிவித்துள்ளார்.
“பாபர் அசாமுக்கு சிறந்த வாய்ப்புகள் உள்ளன. மிக இளம் வயதிலேயே பல சாதனைகளை படைத்துள்ளார். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதில் அவனது கவனம் இருக்க வேண்டும்.
கேப்டன் பதவி என்பது சிறிய விஷயம். அதிலிருந்து வெளியேறி பாகிஸ்தானுக்கு ரன் குவிக்க வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களை கடந்துள்ளேன். அவரால் 15,000 ரன்கள் குவிக்க முடியும்.
விராட் கோலியைப் பாருங்கள். கேப்டன் பதவியில் இருந்து விலகினார். தற்போது ரன் குவித்து வருகிறார். பல சாதனைகளை முறியடிக்க உள்ளார். என்னைப் பொறுத்தவரை அனைத்து வீரர்களும் அணிக்காக விளையாட வேண்டும்.
எனர்ஜி மிச்சம் இருந்தால் தனித்து விளையாடலாம் என யூனிஸ் கான் கூறியுள்ளார். 29 வயதான பாபர் அசாம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 54 போட்டிகளில் 3962 ரன்கள் எடுத்துள்ளார். ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அவர் அணியை வழிநடத்தி வருகிறார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் கடைசியாக 16 இன்னிங்ஸ்களில் ஒரு அரை சதம் கூட பதிவு செய்யவில்லை. இந்நிலையில்தான் யூனிஸ் கான் அவரை விமர்சித்துள்ளார்.