புடாபெஸ்ட்: ஹங்கேரியின் புடாபெஸ்டில் 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடந்து வருகிறது. இதில் இந்திய ஆடவர் அணி தனது 5-வது சுற்றில் அஜர்பைஜானுடன் மோதியது.
முதல் ஆட்டத்தில் இந்தியாவின் டி.குகேஷ், அஜர்பைஜானின் அய்டின் சுலைமான்லியை எதிர்கொண்டார். 38-வது காய் நகர்த்தலில் குகேஷ் வெற்றி பெற்றார். 2-வது ஆட்டத்தில் இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா, அஜர்பைஜானின் நிஜாத் அபாசோவை எதிர்கொண்டார்.
34-வது காய் நகர்த்தலின் போது ஆட்டம் டிரா ஆனது. 3-வது ஆட்டத்தில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, அஜர்பைஜானின் ரவூப் மாவேடோவை எதிர்கொண்டார். 44-வது காய் நகர்த்தலில் அர்ஜுன் எரிகைசி வெற்றியை வசப்படுத்தினார்.
இந்தியாவின் விதித் குஜராத்தி, அஜர்பைஜானின் சக்ரியார் மவேட்யாருக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் 83-வது நகர்த்தலில் டிரா செய்தார். 5 சுற்றுகள் முடிவில் இந்திய ஆடவர் அணி 10 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.
வியட்நாம், சீனா, ஹங்கேரி ஆகிய நாடுகள் 10 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பகிர்ந்து கொள்கின்றன. இன்னும் 6 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில், மேக்னஸ் கார்ல்சனின் நார்வே மற்றும் ஈரான் அணிகள் தலா 9 புள்ளிகளுடன் 5-வது இடத்தைப் பகிர்ந்து கொண்டன.
இதில் பெண்கள் பிரிவில் இந்திய அணி கஜகஸ்தான் அணியுடன் மோதியது. முதல் ஆட்டத்தில் இந்தியாவின் ஹரிகா துரோணவல்லி, கஜகஸ்தானின் பிபிசரா அசவுபயேவாவை எதிர்கொண்டார்.
51-வது காய் நகர்த்தலின் போது ஹரிகா துரோணவல்லி தோற்றார். 2-வது போட்டியில் இந்தியாவின் ஆர்.வைஷாலி கஜகஸ்தானின் மெருர்ட் கமாலிடெனோவாவை வீழ்த்தினார். இந்தியாவின் திவ்யா தேஷ்முக் மற்றும் கஜகஸ்தானின் செனியா மோதிய ஆட்டம் டிராவில் முடிந்தது.
இந்தியாவின் வந்திகா அகர்வால் 4-வது ஆட்டத்தில் கஜகஸ்தானின் ஆலுவா நூர்மனை வீழ்த்தினார். முடிவில் இந்திய மகளிர் அணி 2.5-1.5 என்ற கணக்கில் கஜகஸ்தானை வீழ்த்தியது. 5 சுற்று முடிவில் இந்திய மகளிர் அணி 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.