சென்னை: தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்கும், அதற்கு பதிலாக மஞ்சப்பை விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் டிஜிட்டல் கண்காணிப்பு அமைப்பை உருவாக்கியுள்ளது.
இதுகுறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகம் முழுவதும் 14 வகையான ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் (எஸ்.யு.பி.) உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 2021-ம் ஆண்டு மஞ்சப்பை பிரச்சாரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் தொடங்கினார்.
அதன்படி, மாநிலம் முழுவதும் 2.2 லட்சத்துக்கும் மேற்பட்ட விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், பிளாஸ்டிக்கின் தீமைகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளின் நன்மைகள் குறித்து குழந்தைகளுக்கு கற்பிக்கும் முக்கிய தகவல்களுடன் 19 அனிமேஷன் கல்வி வீடியோக்கள் தயாரிக்கப்பட்டு சுமார் 60,000 பள்ளிகள் மற்றும் 9 ஆதி திராவிட பள்ளிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.
மேலும், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சென்னையில் மஞ்சப்பை படையணி அறிமுகப்படுத்தப்பட்டது. இக்குழுவினர் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடையை மீறுபவர்கள் கண்டறியப்பட்டு உள்ளாட்சி அமைப்புகளால் உடனடி நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்கிறது.
அதன்படி கடந்த மார்ச் மாதம் சென்னையில் இரண்டாவது மஞ்சப்பை படை அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் ஆகஸ்ட் மாதம் ஊட்டி, கொடைக்கானல், கோயம்புத்தூர் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புள்ள பகுதிகளை உள்ளடக்கி “பசுமைப் படை” விரிவுபடுத்தப்பட்டது.
மேலும், கடல் பிளாஸ்டிக் மாசுபாட்டை மையமாக வைத்து மெரினா கடற்கரையில் நீல கடல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நீலம் மற்றும் மஞ்சள் அணிகள் சராசரியாக 74,000 கி.மீ. 5,400 இடங்களுக்கு மேல் சென்றடைந்துள்ளது.
மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடை, விழிப்புணர்வு பிரச்சாரங்கள், விற்பனை இயந்திர செயல்பாடுகள், பசுமைப்படை மற்றும் கடற்கரை மைய செயல்பாடுகள், ஆப்-சார்ந்த கருவிகள் போன்றவற்றுக்கு எதிரான மீறல்களைக் கண்காணிக்க டிஜிட்டல் கண்காணிப்பு கருவிகளை உருவாக்கியுள்ளது.
இந்த தரவுகள் டிஜிட்டல் டாஷ்போர்டுகள் மூலம் நிகழ்நேரத்தில் கண்காணிக்கப்பட்டு, சிறந்த மேற்பார்வை மற்றும் தரவை சரியான நேரத்தில் அணுகுவதை உறுதிசெய்கிறது.