சென்னை: கால்நடை பராமரிப்பு துறையில், 350 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க, இயக்குனருக்கு அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, தமிழக கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் இயக்குனருக்கு, துறையின் அமைச்சர் பணி அலுவலர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் த.சங்கர் அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
கால்நடை பராமரிப்புத் துறையில் பணிபுரியும் 149 உதவியாளர்களுக்கு பதவி உயர்வு ஆணை வழங்கியதற்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். டி.என்.பி.எஸ்.சி., இளநிலை உதவியாளர், தட்டச்சர் பதவி உயர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, சீனியாரிட்டி பிரச்னை காரணமாக, கடந்த 13 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படவில்லை.
இந்த வழக்கின் மீது போர்க்கால நடவடிக்கை எடுத்து, வழக்கை விரைவில் முடித்து, உதவியாளர் பதவிக்கு உயர்த்துமாறு கேட்டுக்கொள்கிறோம். கால்நடை பராமரிப்புத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள 424 உதவியாளர் பணியிடங்களில் 350-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதனால், ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது. அவர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு, 13 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு பதவி உயர்வு கிடைக்காத ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.