சென்னை: சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில், மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, குடியிருப்போர் சங்க உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்க, மாவட்ட, நகராட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது. இந்த மழைக்காலங்களில் டிசம்பர் மாதம் வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட வட மாவட்டங்களில் அதிக மழை பெய்து வருகிறது.
குறிப்பாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அதிகரித்து வரும் நீர்நிலைகள், ஆண்டுதோறும் பிரச்னைகளை ஏற்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சி ஆணையர்கள், காவல் துறை, தீயணைப்புத் துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட 4 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் முருகானந்தம் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, குடியிருப்போர் சங்கங்களுக்கு விழிப்புணர்வு மற்றும் பேரிடர் முன்னெச்சரிக்கை கூட்டங்களை நடத்த உத்தரவிட்டார். பருவமழை துவங்க இன்னும் ஒரு மாதமே உள்ளதால், இதற்கான பணிகளை மாவட்ட, நகராட்சி நிர்வாகங்கள் துவக்கியுள்ளன.
அந்தந்த பகுதிகளில் உள்ள குடியிருப்போர் சங்கங்களின் பட்டியல்கள் தயாரிக்கப்பட்டு, அவர்களுக்கு பருவமழை எச்சரிக்கை குறித்து விழிப்புணர்வு மற்றும் பயிற்சி அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மண்டல அளவிலான ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்கள் மூலம் அதிகாரிகளுக்கு இது தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், மழைக்காலங்களில் வழக்கமாக பாதிக்கப்படும் பகுதிகளில் முதல்நிலை அதிகாரிகளையும், பலதுறை அதிகாரிகளையும் பணியில் ஈடுபடுத்த தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி மாவட்ட நிர்வாகங்களும் பணிகளை செய்து வருவதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.