சென்னை: சென்னையில் இருந்து மும்பை செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நேற்று (செப்டம்பர் 19) இரவு 11 மணிக்கு 152 பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்தது. ஓடுபாதையில் ஓடத் தொடங்கியபோது, திடீரென விமானத்தின் அவசர கதவு மணி ஒலித்தது.
பயணிகள் பீதியடைந்தனர். விமானி உடனடியாக விமானத்தை ஓடுபாதையில் நிறுத்தினார்.
விமானப் பணிப்பெண்கள் ஆய்வு செய்ததில், அவசர கதவை திறப்பதற்கான பட்டன் அழுத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கதவின் அருகே இருந்த இருக்கையில் அமர்ந்திருந்த மும்பையைச் சேர்ந்த பயணி வருண் பாரத் (45) அழுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
தெரியாமல் அழுத்தியதாகச் சொன்னார். இதை ஏற்காத விமானி, கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். விமான பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்தில் ஏறி பயணியிடம் விசாரணை நடத்தினர். அவரது பயணத்தை ரத்து செய்த அதிகாரிகள் அவரை விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
வருண் பாரத் மீது விமான பாதுகாப்பு சட்டத்தை மீறியதாகவும், விமானத்திற்குள் தகராறு செய்ததாகவும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.