திருநெல்வேலி: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று திருநெல்வேயில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உலகிலேயே அதிக உறுப்பினர்களை கொண்ட கட்சி பாஜக. பாஜகவில் 10 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். உறுப்பினர் சேர்க்கை திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2-ம் தேதி தொடங்கி வைத்தார். அக்டோபர் 15-ம் தேதி வரை உறுப்பினர் சேர்க்கை நடக்கிறது.
தமிழகத்தில் ஒரு கோடி உறுப்பினர் சேர்க்கை இலக்குடன் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2014-க்கு முன்பு மீனவர்கள் மீது அடிக்கடி துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்தன.
பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படவில்லை. கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மீனவர்களுக்கு 60 சதவீத மானியத்தில் ரூ.1.30 லட்சம் மதிப்பிலான படகு வழங்கப்படுகிறது.
30 சதவீத கடனும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தால் தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் அதிகளவில் பயனடைந்துள்ளனர். மீனவர்களுக்கான கடற்பாசி வளர்ப்பையும் மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. எல்லை தாண்டும் மீனவர்களை கண்டறியும் கருவிகளை ஒரு லட்சம் படகுகளுக்கு வழங்குகிறோம்.
தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிட ஆட்சி நடந்து வருகிறது. இரட்டை சுடுகாடு இல்லாத நிலை உண்டா?. எஸ்சி, எஸ்டி விடுதிகளை முதல்வர் ஆய்வு செய்தாரா? கோவில்களை விட்டு அரசு வெளியேற வேண்டும்.
கோவிலில் அரசு என்ன செய்கிறது? இதற்கு தேசிய அளவில் பேசி தீர்வு காண வேண்டும். மக்கள் பாஜகவை ஆதரிக்கிறார்கள். 4 மாநில சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக கூட்டணி 18 சதவீத வாக்குகளைப் பெற்றது. அடிமட்ட அளவில் பா.ஜ.க.வை வலுப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. 2026 தேர்தலில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும். இவ்வாறு எல்.முருகன் கூறினார்.
நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ, மாவட்ட தலைவர் தயாசங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.