புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்ததால், டெல்லி பெண் அமைச்சரான ஆதிசி, அக்கட்சி எம்எல்ஏக்களால் சட்டமன்ற கட்சித் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து, டெல்லி முதல்வராக ஆதிசி நேற்று பதவியேற்றார். அவருடன் மேலும் 5 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர். வரும் 26, 27-ம் தேதிகளில் ஆதிசி தலைமையிலான புதிய அரசு சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டும் என்பதால் அந்த நாட்களில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
டெல்லியில் சட்டசபையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் முடிவடையவுள்ள நிலையில், ஆதிசியின் முதல்வராக பதவிக்காலம் சில மாதங்கள் ஆகும்; அதன் பின், சட்டசபை தேர்தல் நடக்கும்.
இந்நிலையில், டெல்லியில் புதிய முதல்வர் பதவியேற்ற பிறகு, அமைச்சர்களுக்கான இலாகாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆதிசி, கல்வி, நிதி, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட 13 துறைகளை முதல்வர் கவனிப்பார்.
அமைச்சர் சவுரப் பரத்வாஜுக்கு சுகாதாரம், நகர்ப்புற மேம்பாடு, சமூக நலம் உள்ளிட்ட 8 துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கோபால் ராய்க்கு சுற்றுச்சூழல் உள்ளிட்ட மூன்று இலாகாக்களும், கைலாஷ் கெளட்டுக்கு போக்குவரத்து, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு உள்ளிட்ட நான்கு துறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இம்ரான் ஹுசைன் உணவு விநியோகம் மற்றும் தேர்தல் துறையையும், முகேஷ் அஹ்லாவத் எஸ்சி-எஸ்டி துறையையும் கவனிப்பார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.