சென்னை: பயணிகளுக்கு இடையூறு, ரயில் மீது கல் வீச்சு, சிக்னல் சேதம், பயணிகளிடம் திருட்டு போன்ற குற்றங்களுக்கு ரயில் நிலையங்களுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் முக்கிய காரணம் என ரயில்வே பாதுகாப்பு படை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
எனவே, 39 டாஸ்மாக் கடைகளை வேறு இடங்களுக்கு மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புறநகர் மின்சார ரயில் சேவை மக்களின் பொது போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
சென்னை ரயில்வே கோட்டத்தில் சென்னை கடற்கரை – செங்கல்பட்டு, சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி, சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களில் தினமும் 200-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்த ரயில்களில் தினமும் 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர். பயணிகளிடம் திருட்டு, ரயில் மீது கல் வீசுதல், சிக்னல்களை சேதப்படுத்துதல், ரயிலில் சிக்கி உயிரிழப்பு போன்ற சம்பவங்கள் அடிக்கடி இந்த ரயில்களில் நடக்கின்றன.
இதில் சில பிரச்னைகள் பதிவு செய்யப்பட்டு, ரயில்வே போலீசார் விசாரித்து தீர்வு கண்டு வருகின்றனர். இருப்பினும், ரயில்வே சொத்துக்களுக்கு சேதம் உள்ளிட்ட சில குற்றங்களுக்கு நிரந்தர தீர்வு இல்லை.
இதற்கிடையில், இந்த பிரச்சனைகளுக்கான காரணம் குறித்து ஆர்பிஎஃப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த ஆய்வில், ரயில் நிலையங்களுக்கு அருகில் உள்ள மதுக்கடைகள், பார்கள் தான் இந்த குற்றங்களுக்கு காரணம் என தெரியவந்துள்ளது.
இதையடுத்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு தெற்கு ரயில்வே டாஸ்மாக் நிறுவனத்துக்கு கடிதம் அனுப்பியது. அதில், 39 டாஸ்மாக் கடைகளை இடமாற்றம் செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை ரயில்வே மண்டல ஆர்பிஎப் அதிகாரிகள் கூறியதாவது:-
சென்னை ரயில்வே மண்டலத்தில் உள்ள புறநகர் ரயில் நிலையங்களில் இருந்து 10 முதல் 200 மீட்டர் தொலைவில் உள்ள 39 டாஸ்மாக் கடைகளை ஆர்பிஎப் கண்டறிந்துள்ளது. இந்த கடைகள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் உள்ளன.
முறைகேடுகள் குறித்த புகார்கள் வந்த இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. சில சமயங்களில், தண்டவாளத்தில் இறந்து கிடந்த ஒருவர், அருகிலுள்ள மதுக்கடைகளில் இருந்து குடித்துவிட்டு, தண்டவாளத்தில் நடந்து சென்று ரயிலில் சிக்கினார்.
இது தவிர, லெவல் கிராசிங் கேட் அருகே இயங்கும் சில மதுக்கடைகளை ரயில்வே நிர்வாகம் கண்டறிந்துள்ளது. இளைஞர்கள் மது அருந்திவிட்டு அருகில் உள்ள ரயில் தண்டவாளத்தின் வழியாக நடந்து சென்று சிக்னல்களை சேதப்படுத்துகின்றனர்.
இது ரயில் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை கடுமையாக பாதிக்கும். மாதம் 10 கல் வீச்சு வழக்குகளை பதிவு செய்கிறோம். இது ரயில் நிலையங்களுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளுடன் தொடர்புடையது என ஆய்வில் தெரியவந்துள்ளது.
இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண கூட்டுக்குழு அமைப்பது தவிர, சர்ச்சைக்குரிய இந்த கடைகளை இடமாற்றம் செய்வதற்கான வழிமுறை வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.