பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனர் சிவா இயக்கத்தில், நடிகர் ஜூனியர் என்டிஆர்-ன் தேவரா திரைப்படம் இன்று உலக அளவில் வெளியானது. தெலுங்கு திரை உலகில் மிகப்பெரிய சூப்பர் ஸ்டாராக விளங்கி வரும் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்., இறுதியாக 2018ம் ஆண்டு “அரவிந்த சமேத வீரராகவ” என்ற திரைப்படத்தில் சோலோ ஹீரோவாக நடித்துள்ளார். அதன் பிறகு 2022ல், பிரபல இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான “ரத்தம் ரணம் ரௌத்திரம்” என்ற திரைப்படத்தில் ராம் சரனோடு இணைந்து கலக்கி இருந்தார்.
இப்போது, சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜூனியர் என்டிஆர் சோலோ ஹீரோவாக நடித்து இருக்கும் தேவரா திரைப்படம் வெளியானது. இதற்கிடையில், ஐதராபாத்தில் உள்ள ஒரு திரையரங்கில் வைக்கப்பட்டிருந்த ஜூனியர் என்டிஆரின் மிகப்பெரிய கட்டவுட் தீப்பற்றி எரிந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜூனியர் என்டிஆரின் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது, வெடித்த பட்டாசுகள் காரணமாக அந்த கட்டவுட் முழுமையாக எரிந்ததாக கூறப்படுகிறது. ஆனால், படம் சரியாக இல்லாததால் ரசிகர்களே அந்த கட்டவுட்டை கொளுத்தியதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
எது எப்படி இருந்தாலும், இந்த சம்பவத்தில் உடனடியாக தீயணைப்பு துறையினர் களமிறங்கி தீயை அணைத்துள்ளனர். அதில் யாருக்கும் எந்த விதமான காயங்களும் ஏற்படவில்லை என்பது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. தற்போது, தேவரா திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் ரசிகர்களின் மத்தியில் இந்த சம்பவம் பேசப்பட்டு வருகின்றது.