பாட்னா: பீகாரின் மேற்கு மற்றும் கிழக்கு சம்பரான், சீதாமர்ஹி, ஷீயோகர், முசாபர்பூர், கோபல்கஞ்ச், சிவன், சரண், வைஷாலி, பாட்னா, மதுபானா மற்றும் போஜ்பூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமானது முதல் கனமழை வரை வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முன்னறிவிப்பை தொடர்ந்து, மாவட்ட நிர்வாகங்கள் விழிப்புடன் இருக்கவும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மாநில பேரிடர் மேலாண்மை துறை அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே, கங்கைக் கரையோரத்தில் உள்ள பாக்சர், போஜ்பூர், சரண், பாட்னா, சமஸ்திபூர், பெகுசாரை, முன்கர், பாகல்பூர் உள்ளிட்ட 12 மாவட்டங்கள் ஏற்கனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
தொடர் மழையால் ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 13.5 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான மக்கள் வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பீகார் நீர்வளத்துறை கோசி மற்றும் கந்தன் ஆறுகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
கடந்த இரண்டு, மூன்று நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால், ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நிலவரத்தின் தீவிரம் காரணமாக வால்மீகிநகர் அணையில் இருந்து கந்தக் ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது.
சனிக்கிழமை காலை 8 மணியளவில் 6.87 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக மாநில நீர்வளத்துறை தெரிவித்துள்ளது. இதேபோல், கோசி ஆற்றில் பீர்பூர் அணையில் இருந்து சனிக்கிழமை காலை 8 மணிக்கு 7.54 லட்சம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.