கொல்கத்தாவில் உள்ள மேற்கு வங்க அரசு மருத்துவமனையில் மருத்துவ ஊழியர்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜூனியர் டாக்டர்கள் தங்கள் வேலைநிறுத்தத்தை தொடரப்போவதாக அறிவித்துள்ளனர். மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஆர்.ஜி.கார் அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, ஜூனியர் டாக்டர்கள் 42 நாட்களாக பணியை நிறுத்தியுள்ளனர். முதல்வர் மம்தா உறுதி அளித்ததை அடுத்து வரும் 20ம் தேதி பணிக்கு திரும்புவோம் என அறிவித்தனர்.
இதற்கிடையில், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம், கமர்ஹத்தியில் உள்ள சாகர்துட்டா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் மூச்சுத் திணறல் காரணமாக நேற்று இரவு உயிரிழந்தார். செயற்கை ஆக்சிஜனை செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதற்குள் அந்த பெண் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால் மருத்துவர்கள் எந்த சிகிச்சையும் அளிக்கவில்லை என பெண்ணின் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
பெண்கள் வார்டில் இருந்த ஜூனியர் டாக்டர்கள் மற்றும் செவிலியர்களை உறவினர்கள் 10க்கும் மேற்பட்டோர் தாக்கினர். இச்சம்பவத்தைக் கண்டித்து சாகர்தட்டா அரசு மருத்துவமனை இளநிலை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக நள்ளிரவில் அறிவித்தனர்.
இச்சம்பவத்தை கண்டித்து மாநிலம் முழுவதும் ஜூனியர் டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேற்கு வங்கம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஜூனியர் டாக்டர்கள் வேலைநிறுத்தம் செய்வது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது.