துபாய்: உலக கோப்பை டி20 பயிற்சி ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மகளிர் ஐசிசி டி20 உலகக் கோப்பையின் 9வது சீசன் அக்டோபர் 3 முதல் 20 வரை நடைபெறுகிறது.
இந்தியா, ஆஸ்திரேலியா உட்பட மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை ஆகிய அணிகளுடன் ‘ஏ’ பிரிவில் இந்திய அணி இடம் பெற்றுள்ளது. இதற்கான பயிற்சி ஆட்டம் நடைபெற்று வருகிறது. துபாயில் நடந்த பயிற்சி ஆட்டத்தில் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பீல்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணிக்கு ஜெமிமா ரோட்ரிக்ஸ் (52), யாஸ்திகா (24) கைகொடுத்தனர். இந்திய அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்தது. சவாலான இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சினெல்லே ஹென்றி (59*) நம்பிக்கை அளித்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 121 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய தரப்பில் பூஜா 3 விக்கெட்டுகளையும், தீப்தி சர்மா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.